பயணிகளின் பாதுகாப்பிற்காக, பஸ்களில் தேவையற்ற பயணப்பொதிகளை எடுத்துச் செல்வதை முற்றாக தடை செய்ய இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.அதன்படி பயணிகளுக்கு தமது பைகளை பொதிகள் வைக்கும் இடங்களில் வைக்காமல், அவற்றை தம் வசம் வைத்திருக்குமாறு சங்கத்தின் தலைவரான கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சில நாட்களில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தலாம் என இந்திய உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கையுடன் மீண்டும் எங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பஸ் ஊழியர்களுக்கு சங்கம் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் சந்தேகத்திற்கிடமான பொதிகள் மற்றும் பஸ்களில் செல்பவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் , பயணிகள் தங்களுடைய பாதுகாப்பையும் ஏனையவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறு மீண்டும் அறிவுறுத்தப்படுவதாக அவர் ,மேலும் தெரிவித்தார்.