பிரதமருடன் நேரடி பேச்சுவார்தைக்கு ஏற்பாடு செய்துவிட்டே புறக்கோட்டை கடைவீதிக்கு வந்தோம்! : அமைச்சர் மனோ

0
126

பெறுமதி சேர்க்கை வரி தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேரடி பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்து தாருங்கள். நாங்கள் கடையடைப்பை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம் என்று நேற்று இரவு எம்மை சந்தித்த புறக்கோட்டை வர்த்தகர் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தார்கள்.

அந்த கோரிக்கையை ஏற்று பிரதமருடன் கலந்துபேசி நேரடி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துவிட்டு, அந்த செய்தியை எடுத்துக்கொண்டே நானும் என்னுடன், அமைச்சர் பழனி திகாம்பரம், முஜிபுர் ரஹ்மான் எம்பி, மாகாணசபை உறுப்பினர் கே.டி. குருசாமி, எஸ். ராஜேந்திரன் ஆகியோரும் இன்று புறக்கோட்டை கடைவீதிக்கு சென்றோம். ஆனால், புறக்கோட்டை வர்த்தகர் சங்க தலைவர் நஜிமுதீன் தலைமையிலான ஒருசிலர் தாம் கடையடைப்பு ஊர்வலத்தை இன்று நடத்தியே தீருவோம் என பிடிவாதம் செய்தனர்.

அதேபோல் இரும்பு வர்த்தக சங்கத்தை சார்ந்தோர் எந்தவித பேச்சுவார்த்தை முயற்சிகளையும் முன்னெடுக்காமல், ஒரேயடியாக கடையடைப்பை செய்ய முயற்சி செய்தனர்.

எனினும் “இந்த பிரச்சினையை பேசித்தீர்ப்போம், பேசத்தயாராக பிரதமரும், அமைச்சர்களும், எம்பியும் இருக்கின்றோம், முடியாவிட்டால் போராடுங்கள்” என்ற எங்கள் நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொண்டு கடைகளை உடனடியாக திறந்த அனைத்து வர்த்தக நண்பர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சா் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

ஹோமாகமை-மஹரகமையை தளமாக கொண்ட, அகில இலங்கை வர்த்தக சங்க பிரதிநிதிகளையும் அழைத்துக்கொண்டு, புறக்கோட்டை வர்த்தகர் சங்க பிரதிநிதிகள் என்னுடன் பேச வேண்டும் என்று கோரிய உடனேயே ஏனைய பணிகளை இடை நிறுத்துவிட்டு நேற்று நள்ளிரவு வரை நான் வர்த்தகர் சங்க நண்பர்களுடன் பேசினேன்.

என்னுடன் வர்த்தகர்களின் அழைப்பை ஏற்று அமைச்சர் பழனி திகாம்பரமும் பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டார். இதன்போது, பிரதமருடன் பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்து தாருங்கள் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. வர்த்தகர்கள் முன்வைத்த மாற்று யோசனைகளையும் நான் குறித்துக்கொண்டேன்.

இதன்படி கடையடைப்பு செய்வது இல்லை என்றும், ஊடகவியலாளர்களிடம் கருத்து கூறுவது என்றும், அதன்போது நானும் அங்கே வந்து பிரதமருடனான பேச்சுவார்த்தை பற்றிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் சுமூகமாக பேசி தீர்மானிக்கப்பட்டது.

எனினும் இந்த முடிவுகளை ஒரு சிலர் காலையில் மாற்றிக்கொண்டனர். ஆனால், நான் சொன்னபடி காலையிலேயே பிரதமரை சந்தித்து நேரடி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துவிட்டு கடைவீதிக்கு வந்தேன்.

அமைச்சர் பழனி திகாம்பரமும், முஜிபுர் ரஹ்மான் எம்பியும் என்னுடன் வந்தார்கள். இந்நிலையிலேயே நாம் மூடியிருந்த கடைகளை திறக்கும்படி கோரிக்கை விடுத்தோம். அதன்படி பெரும்பாலோர் கடைகளை திறந்தார்கள். அவர்களுக்கு நன்றி.

இன்று ஒரு நல்லாட்சி அரசாங்கம் இருக்கிறது. அதிலே பிரதமரும், அமைச்சர்களும் எந்த பிரச்சினை தொடர்பிலும் கலந்து பேச தயாராக உள்ளனர். இந்நிலையிலும், தொடர்ந்தும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஊர்வலம் போவோம் என்று பிடிவாதமாக சொல்வது முறையானது அல்ல. இது அரசாங்கத்தை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கும் இனவாத எதிரணியின் மறைமுக அரசியல் நடவடிக்கைக்கு துணை போகும் என்பதை நேற்று எம்மை சந்தித்த வர்த்தகர் சங்க பிரதிநிதிகளிடம் முன்கூட்டியே கூறி இருந்தோம்.

நேற்று இரவு எம்மை சந்தித்த வர்த்தகர் சங்க பிரதிநிதி ஒருவர் இன்று காலை என்னை மீண்டும் சந்தித்து “ஐயா, நிலைமை கைமீறி சென்றுவிட்டது” என்று கூறினார். அதாவது நாம் சொன்ன உண்மை நடந்து விட்டது.

கடந்த காலங்களில் புறக்கோட்டை வர்த்தகர்கள், கடத்தல், கப்பம், படுகொலை, கைது ஆகிய துன்பங்களை சந்தித்த போது அவற்றுக்கு எதிராக உயிராபத்து மத்தியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்து உலகின் மனசாட்சியை தட்டி எழுப்பியவன், நான். ஆர்ப்பாட்டங்கள் பற்றியோ, ஊர்வலங்கள் பற்றியோ எனக்கு எவரும் புதிதாக பாடம் நடத்த வேண்டியது இல்லை.

நான் கொழும்பு மாவட்ட எம்பி. ஒரு கபினட் அமைச்சர். இங்கே இன்று எமது மக்களுக்கு துன்பம் வருமானால், நானே நேரடியாக களத்தில் இறங்குவேன்.

வர்த்தகர் பிரச்சினையோ, வீடு உடைப்போ எதுவாக இருந்தாலும் அதை நேரடியாக சென்று நான் தடுப்பேன். இது என்னை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். என்னை எவரும் எப்போதும் தொடர்பு கொள்ளலாம்.

இந்நிலையில் தன்னிச்சையாக காரியங்கள் செய்து நாங்கள் உருவாக்கிய அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி, சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பேரினவாத மகிந்த அணிக்கு சாதகமான நிலைமையை கொழும்பில் ஏற்படுத்த வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.

எப்படி இருந்தாலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசித்தான் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். வேறு எவரும் இங்கே இல்லை. அந்த நல்ல சூழலை பாழாக்கிக்கொள்ள வேண்டாம் என புறக்கோட்டை புடவை மற்றும் இரும்பு வர்த்தகர்களை கோருகிறேன். இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்த ஒருசிலரது வீடுகளுக்கு அவர்களை தேடி வெள்ளை வேன் வராது. அவர்கள் தத்தம் வீடுகளில் நிம்மதியாக தூங்கலாம் என்ற நல்ல செய்தியையும் பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

இந்த நிம்மதியை ஏற்படுத்த அன்று என்னுடன் கரங்கோர்த்து போராடிய நண்பர்கள் நடராஜா ரவிராஜ், லசந்த விக்ரமதுங்க ஆகியோரின் தியாகங்களையும் மறந்துவிட வேண்டும் என்றும் புறக்கோட்டை புடவை மற்றும் இரும்பு வர்த்தகர்களின் மத்தியில் இருக்கும் ஒருசிலருக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here