ஏறிவந்த ஏணிகளை எட்டி உதைக்கும் ஏராளமானோர் மலையகத்தில் மனித நேயத்தை மாசுபடுத்தி வருகின்றார்கள். தாம் எங்கிருந்தோ வந்தோம், எப்படி வந்தோம், அரசியலுக்குள் உள்வாங்கப்பட்டும், எல்லாவற்றையும் விட மக்களால் எப்படி மதிக்கப்பட்டோம் என்பதை மறந்து, மறைத்து பேசுவது வெட்கத்தையும், வேதனையையும் தருகின்றது என இ.தொ.கா தமது அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
இது தொடர்பில் ஊடகப்பிரிவு அனுப்பி வைத்துள்ள ஆட்சேபனை அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
இ.தொ.கா ஒரு ஆலமரம்;. இதன் இலைகள் கொட்டி விட்டது என்பதற்காக வளைந்து கொடுக்கும் வாழை மரம் அல்ல. அதன் நிழலில் நெருங்கி இருந்தவர்கள் தான் இன்று நெருஞ்சி முள்ளாக பேசிக் கொண்டு நேர்மைத் திறன் பாடுகிறார்கள்.
வெள்ளாட்டு மந்தையில் கறுப்பாடுகளாக மாறிய கயமைத்தனம் படைத்தவர்கள், வேங்கையாகத் தம்மை நினைத்துக் கொண்டாலும் மக்கள் மத்தியில் மௌசை இழந்தவர்கள் தான். இவர்கள் இங்கிதம் இ.தொ.கா வை ஒருபோதும் வீழ்த்திவிடாது. காரணம் அது மக்கள் கட்சி. மக்களின் மனதில் ஊறிய கட்சி. தியாகத்தால் உருவான தேசியக் கட்சி. இறுதியாகவும், உறுதியாகவும் ஏற்றுக் கொள்ளும் இனத்துவக் கட்சி. இதனை மறந்து விட்டு இங்கிருந்து போனவர்கள் அங்கிருந்து கொண்டு ஆர்ப்பாட்டமாய் பேசுவதும், ஆலவட்டம் பிடிப்பதும் நீடித்து நிலைக்கும் ஒன்றல்ல. அதற்கான உடனடி பதிலை மக்கள் பாடமாகக் கற்பிக்கும் நாள் வெகுதூரம் இல்லை.
பிரன்ஸ்வீக் தோட்டத்தில் புலம்பிய கறுப்பாடுகளை ஏற்றுக் கொள்ள நாமோ அல்லது நமது ஸ்தாபன அங்கத்தவர்களோ, தொண்டர்களோ தயாரில்லை. காரணம் பட்டம் போல் அவர்கள் காலத்துக்குக் காலம் காற்றுப் பக்கம் அலைபவர்கள். இவர்களின் திட்டுகளில் திறனற்ற பேச்சுக்களினால் தான் எமது ஸ்தாபனம் வளர்ச்சி பெறும் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகின்றோம்.
இத்தகைய பின்னணியில் முனுசாமி, ராமசாமி, லொள்ளுசாமி, சிவகுருக்கள் போன்ற பூமாதேவிகளும், மாயாதேவிகளும் எல்லாவற்றுக்கும் சாமிகளே மந்தைகளில் நடனமாடி திரிகிறார்கள். இவர்களில் யார் அந்த கறுப்பாடுகள். கண்டு பிடிக்க முகப்புத்தக வாசகர்களுக்கு சிவப்பு ரோஜாக்கள் பரிசாகக் கிடைக்க காத்திருக்கின்றது.
இன்னுமொரு புதிய விடயத்தை சொல்லியாக வேண்டும். தமிழ் முற்போக்குக் கூட்டணியில் மறைக்கப்பட்டு வரும் புதிய மர்மங்கள் வெளிச்சத்தில கசியத் தொடங்கியுள்ளன. இதைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.
எஸ்.தேவதாஸ்
ஊடக இணைப்பாளர்