பெண்ணை 30 துண்டுகளாக வெட்டி கொடூர கொலை ; அதிரவைத்த சம்பவம்

0
32

இந்தியாவின் பெங்களூருவில் 29 வயது பெண்ணை 30 துண்டுகளாக வெட்டி கொடூரமாக‌ கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குற்றவாளியை தனிப்படை பொலிஸார் நெருங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பெங்களூருவில் உள்ள வயாலிக்காவல் பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி (29). தனியார் நிறுவன ஊழியரான இவர் தனது கணவர் ஹேமந்த் தாஸை பிரிந்து, தனியாக வசித்து வந்தார்.இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அவரது வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அயலவர், மகாலட்சுமியின் சகோதரர் ஹுக்கும் சிங்கிற்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து மகாலட்சுமியின் குடும்பத்தினரும், அண்டை வீட்டாரும் வீட்டை திறந்து பார்த்தபோது, குளிர்சாதன பெட்டியில் மகாலட்சுமியின் உடல் 30 துண்டுகளாக வெட்டப்பட்டு தனித்தனி கவரில் வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சம்பவம் தொடர்பில் , வயாலிகாவல் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இரண்டு நாட்களில் அதன் அறிக்கை பொலிஸாரிடம் வழங்கப்பட உள்ளது.இந்நிலையில், பெங்களூரு மாநகர காவல் ஆணையர் தயானந்த் கூறுகையில்,

‘‘இந்த வழக்கை விசாரிக்க 4 தனிப்படைகளை அமைத்திருக்கிறோம். கொலை செய்யப்பட்ட பெண்ணின் செல்போனை ஆய்வு செய்ததில் முக்கிய தகவல் கிடைத்தது. சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் கொலையாளி பற்றிய முக்கிய துப்பு கிடைத்திருக்கிறது.

இதுதவிர அந்த பெண்ணின் கணவர், அவரது ஆண் நண்பர்கள் 4 பேரை விசாரணை வளையத்தில் கொண்டு வந்திருக்கிறோம். சந்தேகத்துக்குரிய 2 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.ஏறக்குறைய குற்றவாளியை நெருங்கி விட்டோம். மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு தனிப்படை பொலிஸார் விரைந்துள்ளதாக கூறியுள்ளார்.

பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டு குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here