புதிய மகசீன் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவை அவரது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஸ இன்று பார்வையிட்டார்.
கடந்த 2013ஆம் ஆண்டில், றக்பி தொடரொன்றை ஏற்பாடு செய்வற்காக ‘கிரிஷ்’ என்ற நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாயைப் பெற்றார் என்றும் அதனை அவர் முறைகேடாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே, அவரிடம் நேற்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையிலேயே நிதிச் சலவைச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் கொழும்பு கோட்டை நீதவான் திருமதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, மேற்படி நிதியினை, நாமல் எவ்வாறு பயன்படுத்தினார் என்று தெரிவிக்கத் தவறியமை காரணமாக, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
எவ்வாறாயினும், மேற்படி 70 மில்லியன் ரூபாய், நாமல் ராஜபக்ஷவின் தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.