அடையாளம்’ சிவில் அமைப்பு ‘தாமரைக் குளம்’ பதிவர் சங்கத்துடன் இணைந்து வருடாந்தம் நடாத்தும் மகளிருக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி இவ்வருடம் இரண்டாவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
‘மீனாட்சி அம்மை வெற்றிக் கிண்ணம்’ என்று பெயர் சூட்டப்பட்டு எதிர்வரும் ஜுலை 31ம் திகதி நானுஓயா தமிழ் மகா வித்தியாலய மைதானத்தில் காலை 8 மணி தொடக்கம் போட்டி இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
கிரிக்கெட் போட்டியில் பங்குபற்ற முன்பதிவு செய்தவர்கள் மற்றும் புதிய அணிகள் மைதானத்திற்கு 9 மணக்கு முன்னர் வருகை தந்து தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என அடையாளம் அமைப்பின் இணைப்பாளர் நடராஜா திருச்செல்வம் தெரிவித்துள்ளார்.
8 பேர் கொண்ட மகளிர் அணி போட்டியில் பங்குபற்ற முடியும் என்பதுடன் வெற்றிபெற்று முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு பணப்பரிசும் வெற்றிக் கிண்ணமும் வழங்கப்படவுள்ளதுடன் பங்குபற்றும் அணிகளுக்கு நினைவுக் கிண்ணங்கள், சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.
இந்த கிரிக்கெட் போட்டியுடன் இணைந்ததாக அடையாளம் அமைப்பின் சமூகப் பணியின் மற்றுமொரு அங்கமாக வரிய பிரதேச பாடசாலைகளில் ‘நவீன வகுப்பறை’ (modern classroom) அமைப்பதற்கு பொருட்கள் வழங்கி உதவும் நிகழ்வும் ஜுலை 30ம் திகதி இடம்பெறவுள்ளது.
இதன்கீழ் தெரிவு செய்யப்பட்ட மூன்று பாடசாலைகளுக்கு பொருளுதவி வழங்கப்படவுள்ளது.
நடராஜா திருச்செல்வம்
இணைப்பாளர்