மஹியங்கனை – கிராதுருகோட்டை பிரதான வீதி ஹத்தன்னாவ பிரதேசத்தில் 27.04.2018 அன்று இரவு சிறிய ரக லொறி ஒன்று காட்டு யானை ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.மெதிரிகிரிய – திவுலன்கடவல பிரதேசத்திலிருந்து வெல்லவாய நோக்கி பயணித்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லொறி சாரதி எதிரே வந்த யானையை கண்டவுடன் லொறியின் வேகத்தை கட்டுப்படுத்த முயற்சித்த பொழுது இவ் விபத்து சம்பவித்துள்ளது.
இந்நிலையில் லொறியில் 13 பேர் பயணித்துள்ளதாகவும், இதில் 4 பேர் காயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதியில் தொடர்ந்தும் காட்டு யானையின் நடமாட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் நீண்ட காலமாக காட்டு யானைகளின் அட்டகாசம் காணப்பட்ட போதிலும் இதனால் பல விபத்து சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
(க.கிஷாந்தன்)