மலையக மக்கள் எதிர்நோக்கும் அத்தியாவசியப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க முடியாமல் அரசாங்கத்திலிருந்து வெளியேறி சுயாதீனமாக இயங்கப் போவதாக கபட நாடகம் ஆடுகின்றவர்கள் தீர்க்கமான முடிவு எடுக்க முடியாத முதுகெலும்பு இல்லாதவர்கள் என்பதை நிரூபித்துள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தமது அறிக்கையில்,
நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த பழனி திகாம்பரம் மலையக மக்களுக்கு செய்த சேவையில் துளியளவும் செய்யாமல் 20 பேர்ச் காணி. ஸ்லப் போட்ட வீடு, 1000 ரூபா சம்பளம், மலையகத்துக்கு பல்கலைக் கழகம் என்று கூறி ஏமாற்றி கோட்டாபய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக இருந்த ஜீவன் மக்களின் நலனுக்காக அரசாங்கத்தில் இருந்து இராஜினாமா செய்து விட்டதாக நாடகம் ஆடுவது வேடிக்கையாக இருகின்றது.
அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதோடு மாத்திரம் நின்று விடாமல், சுயாதீனமாக இயங்கப் போவதாகக் கூறியுள்ளமை சிந்திக்கத் தக்க விடயம் ஆகும். அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுவதாக இருந்தாலும், ஆதரவாக இருந்தாலும் ஒரே முடிவை எடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து சுயாதீனமாக இயங்குதல் என்றால் ஆளுங் கட்சிக்கோ எதிர்க் கட்சிக்கோ பாதகமில்லாமல் இருதரப்புக்கும் பொதுவாக நல்ல பிள்ளையாக இருந்து கொள்வது என்று அர்த்தம் கொள்ள வைக்கின்றது. அதன்படி, நாளைக்கே அமைச்சுப் பதைவியைப் பெற்றுக் கொள்ள அழைப்பு விடுத்தாலும் ஒட்டிக் கொள்ள மாட்டார்கள் என்று கூற முடியுமா?
அரசாங்கத்தின் ஆராஜகம், எரிபொருள், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய்தட்டுப்பாடு, அரிசி, மா, சீனி, பருப்பு முதலான அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் போன்றவற்றால் கஷ்டப்பட்டுக் கொண்டு, தமக்கு விமோசனம் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் தலவாக்கொல்லையில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான போராட்டத்தில் அரசியல், தொழிற்சங்க பேதமின்றி பெருந் திரளாகப் பங்குபற்றியுள்ளார்கள். இதை சகித்துக் கொள்ள முடியாத ஜீவன் எமது தலைவர் திகாம்பரத்தை விமர்சிப்பது அவரது இயலாமையை எடுத்துக் காட்டுகிறது.
அத்தோடு, மலையக மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில், இது தேர்தல் பிரசாரம் என்று பாராளுமன்றத்தில் பேசியிருப்பது அவர் எவ்வளவு தூரம் தனக்கு வாக்களித்த மக்கள் மீது மரியாதை வைத்திருக்கின்றார் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. மக்களை கேவலமாக பேசியதற்குப் பதிலாக, கஷ்டத்துக்கு நிவாரணம் பெற்றுக் கொடுத்திருந்தாலோ அல்லது அரசின் கண்மூடித் தனமான பொருளாதார நெருக்கடிக்கு கண்டனம் தெரிவித்திருந்தாலோ அவரைப் பாராட்டியிருக்கலாம்.
அநியாயத்தை எதிர்த்துக் கேட்க திராணி இல்லாமல் விமர்சித்தால் அவரை முதுகெலும்பு இல்லாதவர் என்றுதான் கூறவேண்டியுள்ளது. இவர்களுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.