மூவின மக்களும் பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க முடியாத நிலை இலங்கையில் உள்ளது – மோகன் சுப்பிரமணியம் தெரிவிப்பு!!

0
109

இந்த நாட்டில் 2015ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் ஒரு வேலை திட்டமாக இனங்களுக்கிடையே ஒரு நல்லுறவை ஏற்படுத்துவதற்கு நல்லிணக்கம் என்ற ஒரு செயல்பாட்டை கொண்டு வந்தார்கள். இந்த நல்லிணக்க செயல்பாடு மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றது.

இனங்கள் மத்தியில் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்த தவறிவிட்டது. இந்த அரசாங்கம் நல்லிணக்க செயல்பாட்டை வெகுவாக செய்திருந்தால் இத்தகைய இனகலவரம் ஏற்பட்டிருக்காது. ஆகவே இந்த கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற இனகலவரத்திற்கு இலங்கை கம்னியூஸ்ட் கட்சி கண்டனம் தெரிவிப்பதாக இலங்கை கம்னியூஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், நுவரெலியா மாவட்ட செயலாளருமான மோகன் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

14.03.2018 அன்று அட்டனில் இலங்கை கம்னியூஸ்ட் கட்சியின் அட்டன் பிராந்திய காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறுபான்மை மக்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளின் மிக முக்கிய பிரச்சினையாக இந்த இன கலவரம் மாறி வருகின்றது.

வரலாற்றில் இலங்கை சுதந்திரமடைவதற்கு தமிழ், மூஸ்லிம், சிங்கள ஆகிய மூவின மக்களும் போராடி நாட்டின் சுதந்திரத்தை பெற்றுள்ளனர். இருந்தும் மூவின மக்களும் இந்த சுதந்திரத்தை அனுபவிக்க முடியாத சூழ்நிலை இன்று காணப்படுகின்றது.

இந்த நிலைமை மாற வேண்டும். சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளும், மதவாதிகளும், பிற்போக்கு சக்திகளும் இந்த மக்கள் மத்தியில் இருக்கின்ற இன ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் அவர்களை தூண்டி விட்டு அரசியல் இலாபங்களுக்காக இந்த மக்களை பழிவாங்கும் செயலை மாற்ற வேண்டும்.

இதனை மாற்றம் செய்வதற்கு இலங்கையில் இருக்கின்ற அனைத்து மக்களும் சமாதான சூழலுக்காக தங்களுடைய அர்பணிப்பை வழங்க வேண்டும்.

எதிர்காலத்தில் சிறுபான்மை மக்களை பாதுகாப்பதற்கான விசேட திட்டங்களை அரசாங்கம்  உருவாக்க வேண்டும். மதவாத, இனவாத சக்திகளை இணங்கண்டு அவர்களுடைய செயல்பாடுகளை தடை செய்வதற்கும், இன முரண்பாடுகளை தூண்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

ஆகவே தனிப்பட்டவர்கள் சட்டத்தை கையில் எடுக்காமல் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு அரசு முழு முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here