தூத்துக்குடியில் அண்ணா நகர் பகுதியில் வசித்து வந்தவர் முத்துராமன். இவரது மனைவி காளியம்மாள். இந்த தம்பதியரின் மகள்களில் ஒருவர் கார்த்திகா. கர்ப்பிணியாக உள்ளார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில், கர்ப்பிணியான கார்த்திகா, அவரது தாயார் காளியம்மாள் இருவரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதில் பலத்த காயமடைந்த 2 பேரும் உயிரிழந்தனர்.
அவர்கள் வசித்து வந்த வீடு 50 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. இந்த நிலையில், கான்கிரீட் வீட்டின் மேற்கூரை பகுதியில் பழைய ஓடுகள் வைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து ஈரநிலையில் ஓடுகள் இருந்த சூழலில் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.
கடந்த வாரம் கார்த்திகாவுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு உள்ளது. இதன்பின்னர் அவரை வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
அவர்களது உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. வீட்டின் மேற்கூரை இடிந்ததில் கர்ப்பிணி உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.