மஸ்கெலியா பிரவுன் வீக் தோட்டத்தில், உள்ள 6 ஆம் இலக்க லயன் குடியிருப்பு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி எற்பட்ட தீவிபத்தில் பாதிப்புக்குள்ளானது.
இதன் போது சேதமடைந்த வீடுகள் தற்போது தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினால், நிர்மாணிக்கப்பட்டு, வீடுகளை இழந்தவர்களுக்கு இன்று குறித்த வீடுகள் கையளிக்கும் நிகழ்வுகள் நடைப்பெற்றுள்ளது.
இதன்போது பாதிப்புக்குள்ளான, நடராஜ் பழவின்டன், துரைசாமி குமரேசன் ஆகியோரின் வீடுகளும் முற்றாக தீக்கிரையாகி இருந்தது.
குறித்த நபர்களுக்கும் புதிதாக வீடுகள் கட்டித்தரப்படும் என்று வாக்குறுதி வழங்கப்பட்டிருந்ததோடு, அவர்களின் பெயர்களும், புதிய வீடுகளின் பட்டியலில் உள்வாங்கப்பட்டிருந்தது.
எனினும் இன்று தமக்கும் வீடுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
புதிய வீடுகளுக்கான பெயர் பட்டியிலில் அவர்களது பெயர்களும் உள்வாங்கப்பட்டிருந்த போதிலும் இன்று அவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட வில்லை.
இது தொடர்பில், அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்ட போது நீங்கள் ஹுன்னஸ்கிரிய போராட்டத்தில் கலந்துக்கொண்டிருந்ததனால் தங்களுக்கு வீடுகள் தர முடியாது என்று கூறுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், தீ விபத்தி்ல் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத சிலருக்கு புதிய வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளதாவும் அதில் அத்தோட்டத்தின் கட்சி தலைவருக்கும் இன்று வீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணி மலையகம் என்ற வரம்பை மீறி நாடு முழுவதிலும் உள்ள மலையக சொந்தங்களுக்காக சேவை செய்து வருகின்றது. எனினும் ஹீன்னஸ்கிரிய போராட்டத்தில் கலந்துக்கொண்டதற்காக தற்போது இருவருக்கு வீடுகள் வழங்க மறுப்பது எந்த வகையில் நியாயம்? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கண்டி ஹீன்னஸ்கிரிய எயார் பாரக் தோட்ட தொழிலாளர்கள் தோட்டங்கள் தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த காலங்களில் தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த போராட்டத்திற்கு மலையகம் முழுவதிலும் உள்ள இளைஞர்கள் நலன்விரும்பிகள் தங்களது ஆதரவுகளை வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.