கால்பந்து மன்னன் பீலே உடல் கல்லறை தோட்டத்தில் அடக்கம்: பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி

0
86

கால்பந்து வீரர் பீலேவின் உடல், இன்று பிரேசிலின் சான்டோஸ் நகரில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கால்பந்து விளையாட்டின் பிதாமகன் என்று போற்றப்படும் பிரேசில் வீரர் பீலே, கடந்த டிசம்பர் 29ம் திகதி புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் சான்டோசில் உள்ள கால்பந்து ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

நாடு முழுவதும் இருந்து சான்டோஸ் நகருக்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, பீலேவின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அவரது மறைவையொட்டி, பிரேசிலில் 3 நாள் துக்கம் அறிவிக்கப்பட்டதுடன், தொடர்ந்து இன்று நண்பகல் பீலேவின் உடல், சான்டோசில் உள்ள நெக்ரோபால் கல்லறை தோட்டத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

கால்பந்து மன்னன் பீலே உடல் கல்லறை தோட்டத்தில் அடக்கம்: பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி | Football King Pele Body Buried Today

கல்லறை தோட்டத்தில் பீலேவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட போது, அவரது குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.

உலகிலேயே மிக உயரமான கல்லறை தோட்டத்தில் 4.4 ஏக்கர் நிலப்பரப்பில், 14 அடுக்கு மாடிகளை கொண்ட நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தில் பீலேவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இங்குள்ள பெட்டகத்தில் பதப்படுத்தப்பட்டு அவரது உடல் வைக்கப்படும் எனவும், ஏறக்குறைய 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்டகங்கள் இங்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே கால்பந்து விளையாடும் அனைத்து நாடுகளும், பீலேவின் சாதனையை போற்றும் வகையில், தங்கள் நாட்டில் உள்ள ஏதாவது ஒரு ஸ்டேடியத்திற்கு பீலேவின் பெயரை சூட்ட வேண்டும் என்று சர்வதேச கால்பந்து கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here