தொழிலாளர் தேசிய முன்னணி – மக்கள் ஐக்கிய முன்னணி சந்திப்பு : சமூகங்களை புரிந்துகொள்வதில் ஒரு முன்மாதிரித்திட்டம்!

0
91

சிரேஸ்ட அரசியல்வாதியான தினேஸ் குணவர்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணியினதும் அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய முன்னணியினதும் உள்ளுராட்சிமன்ற பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று அண்மையில் தொழிலாளர் தேசிய சங்க ஹட்டன் தலைமை பணிமனையிலும், விருந்தகத்திலும் இடம்பெற்றது.

மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவின் வேண்டுகோளின்பேரில் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் அழைப்பின்பேரில் தொழிலாளர் தேசிய முன்னணியின் செயலாளர் நாயகமும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்த இருதரப்பு கலந்துரையாடலில், மக்கள் ஐக்கிய முன்னணியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் அமையத்தின் செயலாளரும் ஹொரணை நகரசபை உறுப்பினருமான லலித் ரோஹன தலைமையில் ஏழு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜி.நகுலேஸ்வரன் தலைமையில் பத்து உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்ட இந்த சந்திப்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

தொழிலாளர் தேசிய சங்க தலைமையகத்தில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் முன்னணியின் ஆரம்பம் அதன் வரலாறு, செயற்பாடுகள், குறித்து கட்சியின் செயலாளர் நாயகம் எம்.திலகராஜ் விளக்கம் அளித்தார். தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.

அதேபோல மக்கள் ஐக்கிய முன்னணியின் உருவாக்கம் , வரலாறு அதன் செயற்பாடுகள் குறித்த அறிமுகத்தை குழுவின் செயலாளர் லலித் ரோஹன வழக்கினார்.

இரண்டு கட்சிகளினதும் வரலாற்றுப்பின்புலங்களுடன் மலையகத் தமிழ் மக்களின் வாக்குரிமை, வாக்குரிமை பறிப்பு, அதனை மீளப்பெற்றுக்கொள்ளுதல் முதலான விடயங்களும் மலையக மக்கள் அரச பொதுநிர்வாக முறைமையில் இருந்து விலக்களித்து பேணப்பட்ட முறைமை தொடர்பிலும் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
குறிப்பாக பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம் பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு சேவையாற்ற முடியாமல் இருக்கும் நிலைமைகளுக்கு தீர்வுகாண கடந்த ஆட்சிக்காலத்தின்போது மக்கள் ஐக்கிய முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்தன பாராளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினராக வழங்கிய ஆதரவிiனை மலையக மக்கள் சார்பாக நன்றியுடன் நினைவு கூர்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார். இந்தச் சட்டத்திருத்தம் பாராளுமன்றத்தில் சமரப்பிக்கப்பட்டும் இன்னும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் இருப்பது தொடர்பில் தாம் கவலை அடைவதாகவும் அது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் நாளில் தமது கட்சி ஆதரவை வழங்கும் என்றும் மக்கள் ஐக்கிய முன்னணி தூதுக்குழு உறுதி அளித்தது. அதேபோல எதிர்வரும் வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பெருந்தோட்டப்பகுதிகளில் புதிய கிராமங்களை உருவாக்கும் அதிகாரசபை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.தொழிலாளர் தேசிய சங்க தலைமையகத்தை பார்வையிட்ட குழுவினர் மேலதிக கலந்துரையாடல்களுக்காக விருந்தகம் ஒன்றில் கூடினர்.

தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடல்களில் உள்ளுராட்சி சபைகளான பிரதேச சபைகள், நகர சபைகள், மாநகர சபைகளில் முன்னெடுக்கப்படகூடிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. இரண்டு தரப்பினரும் தமது அனுபவங்களை பகிரந்துகொண்டதுடன் எதிரவரும் காலங்களில் உள்ளுராட்சி மன்ற மட்டத்தில் முன்னெடுக்கப்படகூடிய அபிவிருத்தி, பெண்கள், குழந்தைகள் நலத்திட்டங்கள், போதை தடுப்பு வேலைத்திட்டங்கள்,கல்விசார் தன்னார்வ வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையால்கள் தனித்தனியாக இடம்பெற்றன. கேகாலை, அவிசாவளை, களுத்துறை போன்ற மாவட்டங்களில் இருந்து வருகைதந்திருந்த மக்கள் ஐக்கிய முன்னணி உள்ளுராட்சி உறுப்பினர்கள் பிரதேச சபைகள் சட்டத்தில் உள்ள குறைபாடு காரணமாக தமக்கு வாக்களிக்கும் பெருந்தோட்ட மக்களுக்கு தாம் சேவையாற்ற முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர். தொழிலாளர் தேசிய முன்னணி சார்பில் நுவரெலியா மாவட்டத்தின் ஒவ்வொரு உள்ளுராட்சி மன்றங்களையும் பிரதிநிதித்துவப்புடுத்தி ஒர உறுப்பினர் மாத்திரம் கலந்துகொண்ட நிலையில் எதிர்வரும் காலத்தில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் சம்மேளனம் ஒன்றினை உருவாக்குவது தொடர்பிலும் தொடர்ச்சியான கலந்துரையாடல்களையும் பயணங்களையும் கருத்துப்பரிமாற்றங்களையும் மேற்கொள்வது என்றும் தீர்மானிக்க்பபட்டது. மலையகப் பெருந்தோட்ட மக்கள் செறிவு குறைவாக வாழ்கின்ற கோகலை, களுத்துறை, கொழும்பு, இரத்தினபுரி போன்ற மாவட்டஙகளில் இவ்வாறு பெரும்பான்மை உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடன் புரிந்துணர்வுடன் செயற்படுவதுடன் இன நல்லிணக்கத்துக்கும் அவசியமான ஒன்றாக சமூகங்களை புரிந்துகொள்வதற்கான சந்திப்பாக மேற்படி சந்திப்பு அமைந்திருந்தது.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here