‘நான் திருடியதாக ராதா சொன்னதை தாங்க முடியவில்லை’ – நடிகை அம்பிகா கண்ணீர்

0
4
hindutamil

நடிகை ராதா, தனது சகோதரி அம்பிகா மற்றும் தம்பி மல்லிகார்ஜுன் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமீபத்தில் புகார் அளித்திருந்தார். அதில், இருவரும் தன்னுடைய ரூ.46 கோடியை, செக் மூலமாக மோசடி செய்ய முயற்சி செய்ததாக கூறியிருந்தார்.

இந்நிலையில் அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நடிகை அம்பிகா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: என்னுடைய சகோதரி என் மீது புகார் தெரிவித்து இருக்கிறார். ரூ.43 கோடி, ரூ.46 கோடி என சொல்லி கொண்டு இருக்கிறார்கள். கவலையாக இருக்கிறது. ராதா செக் கொடுத்தார் என்பது உண்மை. சொத்து தகராறை தீர்க்க ரூ.46 கோடிக்கான செக் வழங்கியது ராதாதான். எனக்கு கொடுக்க வேண்டிய பணத்துக்காக 3 செக் கொடுத்தார். சொத்து விஷயத்தில் மொத்தம் அவர் தர வேண்டியது ரூ.97 கோடி.

ஏஆர்எஸ் கார்டன் நாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தது. அதற்கு பெயர் வைத்தது எம்.ஜி.ஆர். அது உருவாக மூலக் காரணம் நான்தான். அது சினிமாவில் எல்லோருக்கும் தெரியும். அந்த ஏஆர்எஸ் கார்டனில் எனது பங்கு தொடர்பாக எங்களுக்குள் பிரச்சினை நடந்து வருகிறது. அதேபோல் எங்களின் ஏஆர்எஸ் தயாரிப்பு நிறுவனத்திலும் எனக்கு பங்கு இருக்கிறது.

அதை பற்றி ராதாவிடம் பல முறை பேச முயன்றும் அவரிடம் இருந்து பதில் இல்லை. இதையடுத்து காவல் துறையிடம் புகார் கொடுத்தோம். அந்த புகாரில், 10 முறைக்கு மேல் சம்மன் அனுப்பியும் ராதா விசாரணைக்கு ஆஜராகவில்லை. இப்படி, எந்த ஒத்துழைப்பும் தராத ராதா, எனது நம்பரையும் பிளாக் செய்து வைத்திருக்கிறார்.

என்னுடைய தங்க நகைகள் ராதாவிடம் இருக்கின்றன. அதை கேட்டால் எந்த பதிலும் சொல்லவில்லை. தங்கம்தான் ராதாவின் பலவீனம். தங்கத்தை பார்த்தால் அவர் ஒரு மாதிரியாகி விடுவார். அவர் செக்கை காணவில்லை என்று சொல்கிறார். வீட்டில் இருக்கும் பிரச்சினைகளை வீட்டிலேயே முடிக்க வேண்டும் என நினைத்தேன்.

எங்கள் சார்பில் இரண்டரை மாதங்களுக்கு முன்பே புகார் கொடுத்து விட்டோம். நான் திருடியதாக, ராதா சொன்னதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் கையெழுத்திட்ட செக், எனக்கு தர வேண்டிய சொத்தின் பங்கிற்காக அவரே கொடுத்தது. கொடுத்துவிட்டு, அதை தடுத்து நிறுத்தியதும் அவர் தான். எங்கள் தாயின் விருப்பம் நாங்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது. சமரசத்துக்கு ராதா வந்தால் பார்க்கலாம். ராதாவின் கணவர்தான் இந்தப் பிரச்சினைக்கு காரணம். இவ்வாறு அம்பிகா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here