பிராட்மேனுக்கு அடுத்து – டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு! படைத்த சுப்மன் கில்

0
2
dailythanthi

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் சர்வதேச கிரிக்கெட்டில் மேலும் ஒரு அரிய சாதனையைப் படைத்துள்ளார். முல்லன்பூரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் அபாரமாக விளையாடிய அவர் 126 ரன்கள் குவித்தார். இந்த சதத்தின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக தனது 6-வது சதத்தை பதிவு செய்ததுடன், கேப்டனாக 1000 ரன்கள் என்ற மைல்கல்லையும் எட்டினார்.

பிராட்மேனுக்கு அடுத்தபடியாக கில்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கேப்டன்களாக 1,000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்த 101 வீரர்கள் உள்ளனர். அவர்களில் கேப்டனாக 82.76 என்ற பேட்டிங் சராசரியுடன் சுப்மன் கில் தற்போது 2-வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேன் மட்டும் 101.51 சராசரியுடன் முதலிடத்தில் உள்ளார். இலங்கையின் முன்னாள் நட்சத்திர வீரர் சங்ககாரா 69.6 சராசரியுடன் 3-வது இடத்தில் இருக்கிறார். குறிப்பிடத்தக்க வகையில், டெஸ்ட் வரலாற்றில் வேறு எந்த கேப்டனும் 70-க்கும் மேற்பட்ட சராசரியை பதிவு செய்யவில்லை.

இந்திய கேப்டன்களில் 2-வது வேகமான சாதனை

மேலும், இந்திய டெஸ்ட் கேப்டன்களிலேயே மிக வேகமாக 1,000 ரன்கள் கடந்த 2-வது வீரர் என்ற பெருமையையும் கில் பெற்றுள்ளார். அவர் வெறும் 15 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் மட்டுமே 14 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தி கில்லுக்கு முன்னிலையில் உள்ளார்.

564 ரன்களில் டிக்ளேர் செய்த இந்தியா

போட்டியின் 2-வது நாளை 368/3 என்ற கணக்கில் தொடங்கிய இந்திய அணி, தொடர்ந்து அதிரடியாக விளையாடி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 564 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

ஆப்கானிஸ்தான் தடுமாற்றம்

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 2-வது நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 39.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆப்கானிஸ்தான் இன்னும் 451 ரன்கள் பின்தங்கியுள்ளது.

அறிமுக வீரர் அசத்தல்

இந்திய அணியின் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி கவனம் ஈர்த்தார்.

கைவசம் 5 விக்கெட்டுகள் மட்டுமே உள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் அணி ‘பாலோ-ஆன்’ அபாயத்தில் சிக்கியுள்ளது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here