விறகு தேடச் சென்ற முதியவர் தேயிலைத் தோட்டத்தில் சடலமாக மீட்பு!

0
1
kuruvi.lk

நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மறே தோட்டம், வலதளை பிரிவில் விறகு சேகரிக்கச் சென்ற முதியவர் ஒருவர் இன்று (06) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மறே தோட்டம், வலதளை பிரிவைச் சேர்ந்த ராஜகோபால் மணி (வயது 70) எனப்படும் முதியவர், நேற்று (05) காலை தனது வீட்டுத் தேவைக்காக விறகு சேகரிக்கச் சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இது குறித்து அவரது உறவினர்களால் நேற்று மாலை நல்லதண்ணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நல்லதண்ணி பொலிஸாரும் தோட்ட மக்களும் இணைந்து நேற்று தேடுதல் நடத்திய போதிலும் அவர் கண்டறியப்படவில்லை.

இந்நிலையில், இன்று (06) காலை மீண்டும் முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையின் போது, வலதளை பிரிவிற்கும் லக்சபான தோட்டம் முள்ளுகாமம் மேற்பிரிவிற்கும் இடைப்பட்ட தேயிலைத் தோட்டப் பகுதியில் முதியவர் சடலமாக மீட்கப்பட்டார்.

மீட்கப்பட்ட சடலத்தை தோட்ட மக்களும் பொலிஸாரும் இணைந்து தோட்டப் பாரவூர்தி மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு சேர்த்துள்ளனர்.

மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தைப் பார்வையிட்ட பின்னர், பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது.

அங்கு சட்ட வைத்திய அதிகாரியின் முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என நல்லதண்ணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here