ஹட்டன் நகரில் 25 வருட காலமாக மழைக்காலங்களில் கழிவு நீர் வீதியில் செல்வதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

0
105

ஹட்டன் நகரில் சுமார் 25 வருட காலமாக மழைக்காலங்களில் கால்வாய்கள் நிரம்பி கழிவு நீர் வீதியில் செல்வதாகவும் இதனால் வீதி ஆறு போல் காட்சியளிப்பதாகவும் மக்கள் வீதியினை கடக்க முடியாது பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஹட்டன் டிக்கோயா நகர சபை தவறியிருப்பதாகவும் பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
ஹட்டன் நகரில் ஹட்டன் டிக்கோயா பிரதான வீதியில் பஸ் தரப்பு நிலையத்திற்கு முன்னால் மற்றும் ரெலிகொம் நிலையத்திற்கு முன்னால் உள்ள பிரதான வீதியிலும் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள வீதிகள் மழை நேரங்களில் வீதி நீரால் மூழ்குகின்றன.

இதனால் நடந்து செல்லும் பொது மக்கள் மற்றும் வாகன சாரதிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். பாடசாலை செல்லும் மாணவர்கள் குறித்த வீதியில் கடக்கும் போது தங்களுடைய பாதணிகள் மற்றும் சீருடைகள் அழுக்கடைவதாகவும்,கால்வாய் உள்ள கழிவுகள் கலந்த நீரில் நடந்து செல்வதனால் நோய்வாய்படுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் பலர் தெரிவிக்கின்றனர்.

இந்த பிரச்சினைகள் குறித்து ஹட்டன் டிக்கோயா நகர சபைக்கு பல தடைவைகள் பொது மக்கள் முறைபாடுகள் முன் வைத்த போதிலும் அது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும்,பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

நுவரெலியாவின் நுழைவாயிலாக காணப்படும் ஹட்டன் நகரம் மலையகத்தின் பிரதான நகரமாக காணப்படுவதாகவும் நுவரெலியா சிவனொளிபாதமலை செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் அதிகமாக வந்து செல்லும் ஒரு நகரமாக காணப்பட்ட போதிலும் இது குறித்த எவ்வித அக்கறையுமின்றி இருப்பது மிகவும் கவலையளிப்பதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

எது எவ்வாறான போதிலும் ஹட்டன் நுவரெலியா மாவட்டத்தின் மிக முக்கிய நகரம் என்பதனால் நுவரெலியா மாவட்டத்தின் அரசியல் பிரதிநிதிகள் இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here