பாடசாலையிலிருந்து மாலை வீடு சென்று கொண்டிருந்த மாணவியொருவர் கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதுளையில் இடம் பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (08.03.2022) சர்வதேச மகளிர் தினத்தன்று பதுளை ஹாலி-எலைப் பகுதியின் உடுவரை பெருந்தோட்டத்திற்கு செல்லும் பாதையில் இடம்பெற்றுள்ளது.
உடுவரை பெருந்தோட்ட (நேப்பியர்) கீழ்ப்பிரிவைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய மாணவியே கோடரியால் வெட்டிக்கொலை செய்யப்பட்டவராவார்.
இம்மாணவி ஹாலி-எலையில் உள்ள பாடசாலையொன்றில் கல்விப் பொதுதராதர உயர்தரத்தில் கல்வி கற்று வந்தவராவார்.
இக்கொலை குறித்து, ஹாலி-எலை பொலிஸாருக்கு தகவல் கிடைக்கவே, பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து, சடலத்தை மீட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற ஆரம்ப விசாரணையில், கொலையுண்ட மாணவியை, அதே தோட்டத்தைச் சேர்ந்த 32 வயது இளைஞன் காதலித்து வந்துள்ளார்.
இக் காதலை அம் மாணவி நிராகரித்ததினால், ஆத்திரம் கொண்ட குறித்த இளைஞன் கோடரியினால் அம் மாணவியைத் தாக்கி கொலை செய்துள்ளமையும், நீண்ட காலமாக இரு குடும்பங்களுக்கிடையில் தகராறுகள் இருந்ததாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
வீதியில் கொலையுண்டிருந்த மாணவியின் சடலம், பதுளை பதில் நீதிபதி முன்னிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, சட்ட வைத்திய பரிசோதனைக்கென, பதுளை வைத்தியசாலையின் பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும், இக் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கோடரியையும், பொலிசார் அருகாமையிலுள்ள பற்றைக்குள்ளிருந்து மீட்டுள்ளனர்.
கொலைச் சந்தேக நபராக இனம் காணப்பட்ட, அதே தோட்டத்தைச் சேர்ந்த, இளைஞன் அப்பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியிருப்பதாகவும், விரைவில் அந் நபரைக் கைதுசெய்ய முடியுமென்றும், ஹாலி-எல பொலிசார் தெரிவித்தனர்.
கொலையுண்ட மாணவி, கல்வித் துறையில் சிறந்து விளங்கியவரென்றும் அம்மாணவி கல்வி கற்று வந்த பாடசாலை ஆசிரியர் சமூகத்தினர் குறிப்பிட்டனர்.
குறித்த மாணவி வழமை போன்று பெற்றோரை விழுந்து வணங்கிவிட்டு, புத்தகப் பையையும் முதுகில் மாட்டிக் கொண்டு, நேற்று காலை பாடசாலைக்கு வந்து, கற்கை கடமைகளை முறையாக மேற்கொண்டு, மாலை வீடு திரும்பும் போதே, மேற்படி சம்பவம் ஏற்பட்டது.
தோட்டத் தொழில் துறையில் தொழிலாளர்களாக மாணவியின் பெற்றோர் ஈடுபட்டிருந்த போதிலும், தனது மகளை நல்லதொரு நிலைக்கு கொண்டு வரவேண்டுமென்ற நிலையில், பெற்றோர் எதிர்ப்பார்த்திருந்தனர்.
விசாரணையின் போது, அங்கு கூடிய மக்கள், இம் மாணவியை கொடூரமாகக் கொலை செய்த பாதகனை உடனடியாகக் கைது செய்து, பகிரங்க தண்டனை வழங்க வேண்டுமென்றும் கோஷமிட்டதை அவதானிக்க முடிந்தது.
பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்றிருக்கும் சந்தேக நபரைக் கைதுசெய்ய நான்கு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக, ஹாலி-எலப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.