பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்பாக மலையக தொழிற்சங்கங்களுக்கும், தொழில் அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல்

0
28

தோட்டத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் நிறைவடைந்ததையடுத்து நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று கொழும்பில் தொழில் அமைச்சில் இடம்பெற்றது.

இதன்போது, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு விசேட சட்டங்கள் கொண்டுவரப்படும் எனவும், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் ஆகின்றது. எனவே, அவர்களின் தொழிற்துறையும் பாதுகாக்கப்பட வேண்டும். தொழிலாளர்களுக்கு என்று பல சட்ட ஏற்பாடுகள் காணப்பட்டாலும், அது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நடைமுறைப்படுத்தும் வாய்ப்புகள் குறைவு.

அத்தோடு, தொழிலாளர்களுக்கு தொழில் திணைக்களங்களில் வழங்கப்படும் முக்கியத்துவங்கள் மிகவும் குறைவாகவே உள்ளது.

இதனால் பெருந்தோட்ட தொழிலாளர்களை பாதுகாக்கும் உரிமை சார்ந்த மற்றும் நலன்புரி சார்ந்த சட்ட மூலத்தை உருவாக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தரப்பினர் மூலம் அமைச்சருக்கு யோசனை முன்வைக்கப்பட்டதாக அதன் உப தலைவர் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

அதுமட்டுமில்லாமல் ஏனைய தொழிற்சங்கங்கள், சமூக ஆர்வாலர்கள், சிவில் அமைப்புகள் அனைத்து தரப்பினரையும் இணைத்து இந்த 200 வருடத்தில் நாட்டிற்கு பொருளாதார ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் அடையாளத்தை ஏற்படுத்திய பெருந்தோட்ட தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையிலான கருத்துகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அதன் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், உப தலைவர் பாரத் அருள்சாமி, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மற்றும் ஒன்றிணைந்த மலையக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here