Home Blog Page 1603

களுத்துறையில் மண்சரிவு அபாயம் : 39 குடும்பங்கள் இடம்பெயர்வு!

0

களுத்துறை, நேபொட பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 39 குடும்பங்கள் இடம்பெயர்க்கப்பட்டு, தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

களுத்துறை, நேபொட, ரன்னகல மற்றும் தெபுவன, மாபடவத்தை பிரதேசத்தில் வசித்தவர்களே இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர். தற்போது அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இன்றைய தினமும் நாட்டின் பல பகுதிகளிலும் 75 மில்லி மீட்டர் அளவை விடவும் கூடிய கடும் மழை பெய்யக் கூடும் என்று வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

குறிப்பாக மேல்மாகாணம், வடமேல், தெற்கு மற்றும் மத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் இன்று பிற்பகல் தொடக்கம் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

போர்க்குற்ற விசாரணை பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் உள்வாங்கப்படமாட்டர்கள்! : பிரதமர்

0

போர்க்குற்றங்கள் தொடர்பில் அமைக்கப்படவுள்ள விசாரணை பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கமாட்டார்கள். அந்த பொறிமுறையில் இலங்கையின் உள்ளுர் நீதிபதிகளே இருப்பார்கள் என்று இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வியாழக்கிழமையன்று அலரிமாளிகையில் இடம்பெற்ற படையதிகாரிகளுடனான சந்திப்பின் போது இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் ஜூன் 13ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு ஆரம்பிக்கும் போது இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் ஆணையாளர் செய்ட் அல் ஹூசைன் தமது நிலைப்பாட்டை வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக ரணில் விக்கிரமசிங்க இந்த சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.

அதே நாளன்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவும் இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாகவும்  பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் ராடாரில் அரநாயக்கவின் புதிய மற்றும் தற்போதைய படங்கள் பதிவு!

0

அரநாயக்கவில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற பாரிய மண்சரிவை, ஜப்பானின் ராடார் செயற்கைக் கோள் புகைப்படமெடுத்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 03ஆம் திகதி மண்சரிவு இடம்பெற்றவுள்ள மலைப்பகுதி எவ்வாறு காட்சியளித்தது என்றும், கடந்த 25ஆம் திகதி எந்தப்பகுதி மண்சரிவால் பாதிக்கப்பட்டது என்றும் அந்தப் புகைப்படத்தில் மேலும் பதிவாகியுள்ளது.

மெராயா தமிழ் மகா வித்தியாலய மாணவனுக்கு தேசிய மட்ட விருது!

0

நுவரெலியா கல்வி வலயத்தின் ஹோல்புறூக் கோட்டத்திலுள்ள மெராயா தமிழ் மகா வித்தியாலய மாணவன் ஆனந்தராஜ் ரங்கேஸ்வரன் தேசிய மட்ட சமூக விஞ்ஞான போட்டியில் தேசிய மட்டத்தில் விருதினை பெற்றுள்ளார்.

மேற்படி மாணவன் கடந்த வருடம் கல்வி அமைச்சின் அனுசரணையுடன்  நடைபெற்றுள்ள பாடசாலைகளுக்கிடையிலான சமூக விஞ்ஞானப் போட்டியில், பாடசாலை மட்டம், கோட்டமட்டம், வலயமட்டம், மாகாணமட்ட போட்டிகளில் முதலிடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன், தேசிமட்டத்தில் மூன்றாம் இடத்தினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

போட்டிகளுக்கு மாணவர்களை தயார்படுத்துவதில் பாடஆசிரியர்களான திரு.எஸ்.மகேந்திரன். திருமதி எம்.கௌசல்யாதேவி செல்வி எஸ்.வசந்தகுமாரி ஆகியோருடன் பாடசாலையின் ஏனைய ஆசிரியர்களும் ஆர்வத்துடன் செயற்பட்டுளார்கள்.

விருதுபெற்றுள்ள மாணவனுக்கும் பங்களிப்புச் செய்துள்ள ஆசிரியர்களுக்கும் அதிபர் திரு. நுல்லதம்பி முத்துக்குமார் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் வழங்கியுள்ளார்.

கே.புஸ்பராஜ் அக்கரப்பத்தனை நிரூபர்

நெளுந்தெனிய பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல்?

0

கொழும்பு கண்டி பிரதான வீதியில் கஜுகமைக்கு அருகாமையில் உள்ள நெளுந்தெனிய பள்ளிவாசல் மீதே சிறிய ரக குண்டொன்றை  பெட்டிக்குள் பொருத்தி வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை. மேலும் எதுவித தடயங்களும் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன் பொலிசாரும், புலனாய்வுப் பிரிவினரும் உடனடியாக விரைந்து வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேற்படி குண்டு வெடிப்பு தொடர்பில் பொலிசார் உத்தியோகபூர்வ அறிவித்தல் எதுவும் விடுக்கவில்லை.

ஜூன் 01 – நாடுதழுவிய பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தில் மருத்துவ சங்கங்கள்!

0

வைத்தியத்துறையில் காணப்படும் வேலைவாய்ப்புக்களை நிரப்புவதற்கு வைத்திய சேவைப் பணிப்பாளரினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின் நாடுதழுவிய பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமொன்றை எதிர்வரும் ஜூன் 01 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையைக் கருத்தில் கொண்டு கொழும்பு தேசிய வைத்தியசாலை, கம்பஹா, புத்தளம், கேகாலை மற்றும் கிளிநொச்சி மாவட்டம் ஆகிய வைத்தியசாலைகளிலும், கொழும்பு லேடி ரிஜ்வே, காசல் வீதி மகளிர் வைத்தியசாலை, கொழும்பு சொய்ஷா, சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலை, மஹரகம புற்றுநோய்ப் பிரிவு என்பனவற்றில் இந்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை இடம்பெற மாட்டாது எனவும் அச்சங்கம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி நாடு திரும்பியதும் இது குறித்து கலந்துரையாட நேரமொன்றை ஒதுக்கித் தருமாறும் அச்சங்கம் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

களனி கங்கையின் நீர் மட்டம் உயரும் சாத்தியம்.. மக்களை அவதானமாக இருக்கக் கோரிக்கை!

0

நாட்டில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக களனி மற்றும் ஜின் கங்கையில் மீண்டும் நீர்மட்டம் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும் குறித்த ஆறுகளின் நீர்மட்டம் வெள்ளப் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு இதுவரை உயரவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கையில், நாட்டின் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகின்றது.

நேற்றைய தினம் காலி மாவட்டத்தின் தவலம பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் ஜின் கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

களனியாற்றிலும் ஒருசில இடங்களில் நீர்மட்டம் அதிகரித்துக் கொண்டிருப்பதை நீர்ப்பாசனத் திணைக்களம் அவதானித்துள்ளது. எனினும் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் அளவுக்கு நீர்மட்டம் உயரவில்லை.

எனினும் பொதுமக்கள் இதுகுறித்து அவதானமாகவும், விழிப்புணர்வுடனும் நடந்து கொள்வது பாதுகாப்பானது என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

லிந்துலை பிரதேச இரண்டு தோட்டங்களில் மண்சரிவு அபாயம்!

0

நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட லிந்துலை மவுசல்ல கீழ்ப்பிரிவு, கொணன் ஆகிய தோட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

மவுசல்ல கீழ்ப்பிரிவு தோட்டத்திலுள்ள இரண்டு லயன் குடியிருப்பு பகுதிகளில் நிலம் தாழ்ந்துள்ளதால் இந்தக் குடியிருப்புக்களைச் சேர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தோட்ட நிருவாகத்தினரும் பிரதேச கிராம சேவகர்களும் அறிவித்துள்ளனர்.

இதே வேளை கொணன் தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்புப் பகுதியிலும் நிலம் தாழ்ந்துள்ளதோடு சுவர்களில் வெடிப்புக்களும் ஏற்பட்டுள்ளன.
இவ்விடயம் தொடர்பில் தோட்ட மக்கள் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்

இதனைத் தொடர்ந்து அமைச்சரின் பணிப்புரைக்கேற்ப மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் , தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவர் வேலு சிவானந்தன், அமைச்சரின் பாராளுமன்ற ஆய்வாளர் ஜெட்ரூட் ஆகியோர் இந்தத் தோட்டங்களுக்கு விஜயம் செய்தனர்.

இதன் போது மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளைப் பார்வையிட்டதோடு பிரதேச கிராமசேவகர்களுடன் தொடர்பு கொண்டு பிரதேச செயலாளரின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். மவசல்ல கீழ்ப்பிரிவு, கொணன் ஆகிய தோட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்ட குடியிருப்புகளுக்குப்பதிலாக புதிய வீடுகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பில் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

 

நான்கு வருட காலமாக தியானத்தில் இருந்தவர் மரணம்! ;காரைதீவில் சம்பவம்!

0

பவளன்  என அழைக்கப்படும் செல்லத்துரை நடேசானந்தம் வயது 57(பொறியியலாளர்) நான்கு வருட காலமாக காரைதீவு 7 விஷ்ணு கோவில் வீதியில் காணப்படும் கட்டிடம் ஒன்றில் காயத்திரி மந்திரம் கூறி தியானத்தில் இருந்துள்ளார்.

அண்மைய காலமாக மின்குமிழ் எரியாமை  மற்றும் அண்மையில் உள்ளவர்களுக்கு துர்நாற்றம்  வீசுதல் மற்றும் சிற்சில காரணங்களால் ஏற்பட்ட சந்தேகத்தினால் கதவை உடைத்து உள்ளே உறவினர்கள் சென்றனர்.

மிகவும் மோசமான நிலையில் அவரது பூதஉடல் அங்கே காணப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் மற்றும் பொது மக்களின் உதவியுடன் உடல் வெளியே கொண்டுவரப்பட்டது.

இவர் இறந்து 15 நாட்களை தாண்டியிருக்கும் என அவர் உடலின் அழுகிய தோற்றத்தை கொண்டு பேசபடுகின்றது.

இவர் 8வருடங்கள் முன்பிருந்தே தியானத்தில் ஈடுபடுபவர் என கூறப்படுகிறது.மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொள்கின்றனர்.

மீண்டும் மழை: வெள்ளம், மண்சரிவு குறித்து அவதானமாக இருக்கவும்!

0

நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள அடை மழையினால் களனி கங்கை உட்பட பல ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

மையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இது தொடர்பில் குறிப்பிடுகையில்,

“தற்பொழுது நாட்டின் பல பாகங்களிலும் பாரிய மழை பெய்து வருகின்றது. தவலம பிரதேசத்தில் நேற்றைய தினமே நீர் மட்டம் உயர்ந்து காணப்பட்டது.

களனி கங்கையினதும் நீர் மட்டம் சில பிரதேசங்களில் அதிகரித்து வருகின்றது.

நீர்ப்பாசன திணைக்களத்தின் கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும், வெள்ள அனர்த்தம் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் விடுக்கப்படவில்லையெனவும்” அவர் மேலும் கூறியுள்ளார்.

வெள்ள நிலைமை குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் பணிப்பாளர் மேலும் கேட்டுள்ளார்.

மலைப் பிரதேசங்களில் வாழும் மக்கள் மண்சரிவு குறித்து அவதானமாக இருக்குமாறும், இன்றும் பல மாவட்டங்களில் மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.